Wednesday, April 17, 2024
Home » 4 சட்டமன்ற தனி தொகுதிகள் உள்ள கள்ளக்குறிச்சி தொகுதியை குறிவைக்கும் விவிஐபிக்கள்: காய் நகர்த்தும் எடப்பாடியின் நண்பர்கள், மாஜி அமைச்சர்

4 சட்டமன்ற தனி தொகுதிகள் உள்ள கள்ளக்குறிச்சி தொகுதியை குறிவைக்கும் விவிஐபிக்கள்: காய் நகர்த்தும் எடப்பாடியின் நண்பர்கள், மாஜி அமைச்சர்

by Karthik Yash

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி கடந்த 2009ல் மறுசீரமைக்கப்பட்ட தொகுதியாகும். இத்தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 3 தொகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் சேலம் மாவட்டத்திலும் உள்ளது. கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 சட்டமன்ற தொகுதிகள் தனித்தொகுதிகளாகும்.

இந்த தொகுதியில் போட்டியிட விவிஐபிக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் யார் போட்டியிடுவது என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்பி காமராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், எடப்பாடியின் நெருங்கிய நண்பருமான குமரகுருவின் மகன், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த எடப்பாடியின் வலது கரம் இளங்கோவன் போன்றவர்களும் களம் காண காத்திருக்கிறார்கள்.

அதைப்போல பாஜகவை எடுத்துக்கொண்டால் அதனுடன் கூட்டனி சேரும் கட்சிகளுக்கு இத்தொகுதியை ஒதுக்கலாம் என்று தெரிகிறது. இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் இணைந்து உள்ளார். இவர் கடந்த முறை பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். தற்போது பாஜ கூட்டணி கள்ளக்குறிச்சியில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரம்பலூர் மாவட்டம்தான் பாரிவேந்தருக்கு சொந்த ஊர். இதனால் பக்கத்து மாவட்டமான கள்ளக்குறிச்சியில் போட்டியிட ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.

* பல்லடம் பொதுக்கூட்டம் பிப்.27ம் தேதிக்கு மாற்றம்: மோடி நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இணைவர்; ஏ.பி.முருகானந்தம் புதுகுண்டு
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் நிறைவு நிகழ்ச்சி வரும் 24ம் தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது. இதற்கு மறுநாள் திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்று அறிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று காலை பல்லடம் மாதப்பூரில் நடைபெற்றது.
பின்னர் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது; பல்லடத்தில் பாதயாத்திரை நிறைவு விழாவும், நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமும் இணைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டமாக வரும் 27ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். பொதுக்கூட்டத்திற்காக கால்கோள் விழா நடைபெற்றது. சுமார் 1300 ஏக்கரில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பாஜ தொண்டர்கள் 5 லட்சம் பேர், பொதுமக்கள் 10 லட்சம் பேர் என 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக இந்த பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாஜவில் இணைய உள்ளனர். பாஜ கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi