கலெக்டர் துவக்கி வைத்தார்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து குழந்தைகள் மையங்களில் முன் பருவ கல்வி பெறும் 2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 வண்ண சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2025-26ம் ஆண்டில் குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் திட்டம் கூடலூர் அருகே தொரப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு பங்கேற்று குழந்தைகளுக்கு வண்ண சீருடைகளை வழங்கி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 486 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 6562 குழந்தைகளுக்கு இரண்டு வண்ண சீருடைகள் வழங்கப்படும் என தொிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கார்குடி அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்ற திறன்கள் குறித்து கேட்டறிந்தார். தேவர்சோலை பேரூராட்சி கடசனாக்கொல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழ்பாடி மற்றும் பெரியபாடி பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துைறயின் சார்பில் முகாம்கள் நடத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூடலூர் அஸ்வினி ஆதிவாசி மருத்துவமனைக்கு சென்ற கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அங்கு ெபாதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முைறகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து அங்குள்ள தொடக்க பள்ளியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின் போது கூடலூர் ஆர்டிஒ., (பொறுப்பு) சங்கீதா, வட்டாட்சியர்கள் (பழங்குடியினர் நலத்துறை) கலைச்செல்வி, நடேசன், தேவர்சோலை பேரூராட்சி தலைவர் வள்ளி, செயல் அலுவலர் பிரதீப்குமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.