கோவை: இந்திய சாலைகளில் சராசரியாக நாளொன்றுக்கு 480 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் குறித்த மாநாடு கோவையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறையின் சாலைப் பாதுகாப்பு பிரிவு பொறியாளர் மனுநீதி கலந்துகொண்டு பேசியதாவது: வாகன தொழில்நுட்ப வளர்ச்சியைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியமாக கருதப்பட வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வொரு நாளும் இந்திய சாலைகளில் சுமார் 480 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கினறனர்.
கடந்த வருடம் மட்டும் சாலை விபத்துகளில் 1.85 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. அதிவேகமாக செல்லும் வாகனங்களை உருவாக்கும் அதே நேரத்தில் அவற்றை உடனடியாக நிறுத்தும் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். தற்போது உள்ள வாகனங்கள் ஸ்டார்ட் செய்யப்பட்டதும் 100 கிமீ வேகத்தை 10 வினாடிக்குள் அடைகின்றன. எனவே வேகக் கட்டுப்படுத்திகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும். கோவையில் பெரும்பாலான மக்கள் சாலை விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கின்றனர். ஒவ்வொருவரும் தங்களுடைய வாகனங்களை முறையாக பராமரிப்பது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.