கிருஷ்ணகிரி, ஜூலை 26: கிருஷ்ணகிரியில் 450 பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை எம்எல்ஏ., நகர்மன்ற தலைவர் வழங்கினர். கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில், 1974ம் ஆண்டிற்கு பின்பு பட்டா வழங்கப்படவில்லை. பட்டாவிற்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், வருவாய் பின் தொடர் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு எண் 2 மற்றும் 3வது வார்டுகளில் பட்டாவிற்கு விண்ணப்பித்து காத்திருந்த தகுதி வாய்ந்த 450 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளம்மன் கோயில் வளாகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகர திமுக செயலாளர் நவாப் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் ஆகியோர் பங்கேற்று, 450 பேருக்கு பட்டாக்களை வழங்கினர். நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், அன்பரசன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாலாஜி, சுனில்குமார், செந்தில்குமார், சீனிவாசன், மதன்ராஜ், வேல்மணி, மீனா நடராஜன், புவனேஸ்வரி, தேன்மொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.