Monday, December 11, 2023
Home » 42 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நாகையில் இருந்து போக்குவரத்து துவக்கம் இலங்கைக்கு 50 பயணிகளுடன் கப்பல் சென்றது: மாலை 5 மணிக்கு திரும்பியது

42 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நாகையில் இருந்து போக்குவரத்து துவக்கம் இலங்கைக்கு 50 பயணிகளுடன் கப்பல் சென்றது: மாலை 5 மணிக்கு திரும்பியது

by Karthik Yash

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து 42 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தனுஷ்கோடி-இலங்கை தலைமன்னார் இடையே 1914ல் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கியது. புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்ததையடுத்து கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் 1965ல் இருந்து ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே பயணிகள் போக்குவரத்து நடந்து, 1981ல் உள்நாட்டு போர் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது 42 ஆண்டுகளுக்கு பிறகு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பயணிகள் போக்குவரத்து நேற்று மீண்டும் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதேசமயம், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 8.20 மணிக்கு ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழ்நாடு சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, நாகப்பட்டினம் எம்பி செல்வராசு ஆகியோர் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தனர். கப்பல் போக்குவரத்து துறை செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், பயண கட்டணம் ரூ.7600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணத்துடன் ஒப்பீட்டு பார்த்தால் அதிகமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே ஒன்றிய அரசு 50 சதவீத மானியம் அளிக்க வேண்டும். இந்த கப்பல் சிறிய அளவில் உள்ளது. ஆண்டு முழுவதும் இயக்கும் வகையில் ஒன்றிய அரசு பெரிய அளவிலான கப்பலை இயங்க செய்ய வேண்டும் என்றார்.

விழாவில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், எஸ்பி ஹர்ஷ்சிங், எம்எல்ஏக்கள் முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்), நாகைமாலி (கீழ்வேளூர்)உட்பட பலர் கலந்து கொண்டனர்.மதியம் 12.20 மணிக்கு கப்பல் இலங்கை சென்றடைந்தது. அங்கு பயணிகளுக்கு மலர் மாலை அணிவித்தும், மேள தாளம் முழங்க பரிசுப் பொருள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து அங்கிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்ட கப்பல், மாலை 5 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடைந்தது. அதில் மொத்தம் 30 பயணிகள் வந்தனர். இதில் 29 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள். ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர். இந்த கப்பல் நாளை காலை மீண்டும் 8.20 மணிக்கு இலங்கைக்கு புறப்படும். ஒன்றிய அமைச்சர் பேச்சு: விழாவில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தசோனாவால் பேசுகையில், இந்த கப்பல் போக்குவரத்தால் சுற்றுலா மேம்படும். இதன்மூலம் நாட்டின் வருமானம் அதிகரிக்கும். விரைவில் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் பகுதிக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும். இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது என்றார்.

* இரு நாடுகளையும் இணைக்கும் பாலம்: பிரதமர் மோடி பேச்சு
கப்பல் போக்குவரத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: நாகப்பட்டினம் துறைமுகம் புகழ்பெற்ற துறைமுகம் என்பதை சங்க கால இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளது. இந்தியா இலங்கை இடையே நீண்ட காலமாக உறவு இருந்துள்ளது. சங்க இலக்கியமான பட்டினப்பாலை, மணிமேகலை ஆகிய நூல்களிலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்து இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே…’ என்ற பாடலில் இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் குறித்து பாடியுள்ளார்.

இதில் இருந்து வரலாற்றில் பூம்புகார் துறைமுகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது நமக்கு தெரிய வருகிறது. இவ்வாறு புகழ் பெற்ற நாகப்பட்டினம் துறைமுகத்தின் பெருமையை மீட்டெடுக்க இலங்கை காங்கேசன் துறைமுகத்தி்ற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் பெருமை அடைகிறேன். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், சுற்றுலா, மக்கள் தொடர்பு மேம்படும். இருநாட்டு இளைஞர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கும். இலங்கை அதிபர் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படுவதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

* ஒரு வாரம் மட்டுமே…
கேப்டன் அன்பரசு (மாநில துறைமுகங்கள் துறை அதிகாரி) கூறுகையில், இந்த கப்பல் போக்குவரத்தால் இலங்கையிலிருந்து சிதம்பரம், வேளாங்கண்ணி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களுக்கு ஆன்மிக பயணம் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். கப்பல் போக்குவரத்து ஒரு வாரத்திற்கு இயக்கப்படும். தற்பொழுது விசா எடுப்பதில் உள்ள நடைமுறைகளால் தாமதம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஆன்லைன் மூலம் விசா எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என்றார்.

* 7 பேர் மட்டுமே முன்பதிவால் இன்று ரத்து
இன்று காலை 8.20 மணிக்கு கப்பலில் பயணம் செய்ய நேற்று மாலை வரை 7 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இதனால் போதிய பயணிகள் இல்லாததால் இன்றைய கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் கப்பல் போக்குவரத்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இலங்கை அதிபர் வரவேற்பு
கப்பல் போக்குவரத்து குறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘இந்தியா, இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலம் காலமாக கடல் வழியாகத்தான் இந்தியா, இலங்கை இடையேயான உறவு பலப்பட்டுள்ளது. தற்போது 42 ஆண்டுக்குப் பின் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் மேலும் மேம்படும்’’ என கூறி உள்ளார்.

* டிக்கெட் எண்படி இருக்கை
முதல்நாள் கப்பலில் பயணம் செய்ய 50 பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களிடம் விமான நிலையத்தில் பின்பற்றப்படும் குடியுரிமை சோதனை, மருத்துவ பரிசோதனை, விசா, பயணிகளின் உடமைகள் என அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர வைக்கப்பட்டனர். இதன்பின் 7.45 மணிக்கு கப்பலில் ஏற பயணிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். கப்பலுக்குள் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வரிசை எண்கள் அடிப்படையில் இருக்கையில் அமர வைக்கப்பட்டு பயண நடைமுறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 8.20 மணிக்கு கப்பல் புறப்பட்டது.

* முதல் நாளில் 75% கட்டண சலுகை
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்தி்ற்கு கட்டணம் ரூ.6,500 மற்றும் ஜிஎஸ்டி 18% என ரூ.7,670 நிர்ணயிக்கப்பட்டது. முதல்நாள் மட்டும் 75% கட்டண சலுகை அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என ரூ.2,803 மட்டும் வசூலிக்கப்பட்டது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?