ஓசூர்: வயநாடு மாவட்டம், தலப்புழா பகுதியில் கண்ணி வெடிகள் வைத்த சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்பட, தமிழகம் மற்றும் கேரளாவில் 40 வழக்குகள் உள்ள நிலையில், ஓசூரில் வாடகை வீட்டில் 4 மாதமாக பதுங்கியிருந்த நக்சலைட் தலைவனை, கேரளாவில் இருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம் நகரில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு வாலிபர் ஒருவர், பெயின்டர் எனக்கூறி வாடகைக்கு வீடு எடுத்துள்ளார். இவர் கேரள மாநிலத்தில் தேடப்பட்டு வரும் நக்சலைட் ஆவார். இவரது கூட்டாளிகளான 2 பேரை, கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வயநாடு பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, மற்றொரு நக்சலைட்டான சந்தோஷ் என்பவரை, கேரள போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தோஷ், ஓசூரில் பதுங்கி இருப்பதை அறிந்த கேரள போலீசார், நேற்று முன்தினம் ஓசூர் வந்தனர். அவர்கள் நள்ளிரவு ஒரு மணி அளவில், ஓசூர் ராம் நகர் பகுதிக்கு சென்று, சந்தோஷை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கேரள மாநிலத்தில் இருந்து மேலும் சில நக்சலைட்டுகள், தமிழகத்திற்குள் நுழைந்ததாக சந்தேகம் இருப்பதாக கூறப்படும் நிலையில், கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், தொடர்ந்து நக்சல் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலத்தின் நக்சல் இயக்கத்தின் கடைசி தலைவராக செயல்பட்ட வர் சந்தோஷ். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியை சேர்ந்தவர். சந்தோஷ் கடந்த 2014ம் ஆண்டு, வீட்டை விட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் சேர்ந்து, செயலாற்றி வந்துள்ளார். அண்மையில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர்களான சிபி, மொய்தீன், சோமன் ஆகியோருடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். வயநாடு மாவட்டம், தலப்புழா பகுதியில் கண்ணி வெடிகள் வைத்த சம்பவம் தொடர்பான வழக்குகள் உள்பட, தமிழகம் மற்றும் கேரளாவில் 40 வழக்குகள், இவர் மீது பதியப்பட்டு உள்ளது. கைதான சந்தோஷை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விரைவில் தேசிய புலனாய்வு துறை போலீசாரும், சந்தோஷிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் வட்டாரத்தில் தகவல் தெரிவித்தனர்.