கம்பம்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகே ராமக்கல்மெட்டு சுற்றுலாத்தலம் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த சுற்றுலாப் பகுதிக்கு நாள்தோறும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த 13ம் தேதி மலை உச்சியில் உள்ள நான்குமலை வியூ பாயிண்ட் என்ற இடத்திற்கு தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சுமார் 40 சுற்றுலாப்பயணிகள் 22 ஜீப்களில் உரிய அனுமதியின்றி சென்றுள்ளனர். தற்போது இடுக்கி மாவட்டத்தில் பருவமழை பெய்து வருவதால், ராமக்கல்மெட்டு மலை உச்சியில் கனமழை கொட்டித்தீர்த்தது. பிற்பகலுக்கு மேல் மலைப்பாதை வழியாக, சுற்றுலாப்பயணிகள் சென்ற வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சேறும், சகதியுமாக சாலைகள் இருந்ததால் வாகனங்கள் வழுக்கியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் திரும்பி ராமக்கல்மெட்டிற்கு வரமுடியாமல் மலை உச்சியில் உள்ள வனப்பகுதியில் சிக்கி தவித்துள்ளனர். ஒரு சில வாகனங்கள் நிலை தடுமாறி மலைப்பகுதிகள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வாகனத்திலிருந்து இறங்கி நடக்கத் தொடங்கியுள்ளனர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள், சுற்றுலாப்பயணிகளை மீட்டு அருகிலுள்ள விடுதியில் தங்க வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
நேற்று முன்தினம் (ஜூலை 14) காலை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சிக்கி தவித்த 22 டிரைவர்கள் உட்பட 40 சுற்றுலாப்பயணிகள், அவர்களது வாகனங்களை மீட்டனர். உரிய அனுமதியின்றி மலை உச்சிக்கு சாகச பயணத்திற்கு அழைத்து சென்ற ஜீப் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து சாகச பயணத்திற்கு சுற்றுலாபயணிகளை அழைத்துச் சென்ற ஜீப் டிரைவர்கள் மீது நெடுங்கண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.