இந்தூர்: மத்தியபிரதேசத்தில் கொரோனா தொற்று நோய் செலவுகள் தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட பதில்களை ஒருவர் காரில் எடுத்து சென்ற ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா. இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம் கொரோனா தொற்று நோய் தடுப்புக்காக வாங்கப்பட்ட மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அதுதொடர்பான பிற பொருட்களின் டெண்டர்கள், பில் உள்ளிட்ட விவரங்களை கோரி மனு அளித்திருந்தார். இந்த தகவல்களை பெற தர்மேந்திர சுக்லா ரூ.2 தர நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் மனுவுக்கு ஒருமாதத்துக்குள் பதில் அளிக்கப்படவில்லை. தொடர்ந்து தர்மேந்திர சுக்லா, மேல்முறையீட்டு அதிகாரியும், மாநில சுகாதாரத்துறை மண்டல இயக்குநருமான டாக்டர். ஷரத் குப்தாவை அணுகினார். சுக்லாவின் மனுவை ஏற்று கொண்ட குப்தா, இலவசமாக பதில்களை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து தர்மேந்திர சுக்லாவுக்கு 40,000 பக்கங்கள் கொண்ட பதில் அளிக்கப்பட்டது. அதனை சுக்லா தன் கார் முழுவதும் அடைத்து எடுத்து சென்றார்.