அய்யய்யோ ஆஸ்டியோபோரோசிஸ்!“என் வயது 55. நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்தேன். தற்போது, என்னால் முன்பு போல் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை. எனக்கு கை மற்றும் கால் வலி அதிகமாக இருக்கிறது. மேலும் மாதவிடாய் நின்று இரண்டு வருடமாகிறது. இதனால் எனக்கு கை மற்றும் காலில் அதிக வலி ஏற்படுகிறது? மாதவிடாய் நின்று விட்டால் பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும் என்று கூறுகிறார்கள். மெனோபாசிற்கு பிறகு ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் தாக்கம் அதிகமாக இருக்குமா, இதற்கு என்ன தீர்வு, இதற்கான உணவு முறைகள் உள்ளதா என்று ஆலோசனை கூறவும்” என மதுரையில் இருந்து வாசகி நாகலட்சுமி தீர்வு கேட்டிருக்கிறார். எலும்பு நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் ஆலோசனை கூறுகிறார்.எலும்புத் தளர்ச்சி!ஆஸ்டியோபோரோசிஸ் என்பதை தமிழில் எலும்புத் தளர்ச்சி என்று சொல்லலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஆண் பெண் இருவரின் உடலில் உள்ள எலும்பு தேய்மானம் ஏற்பட்டு, அதனால் எலும்பின் தன்மை குறையும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை பொதுவாக 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தான் ஏற்படும்.யாருக்கெல்லாம் எலும்புத் தளர்ச்சி?எலும்பு என்பதும்; நம்முடைய சருமம் போல் தான். எப்படி வயதாகும் போது சருமம் சுருங்கி, பொலிவிழந்து, அதில் உள்ள எலாஸ்டிசிட்டி தன்மை குறைகிறதோ அதே போல் தான் வயதாகும் போது எலும்பின் தன்மையும் குறையும் வாய்ப்புள்ளது. 20 வயதில் இருக்கும் எலும்பின் தன்மை 50 வயதில் இருப்பதில்லை. காரணம் அதன் அடர்த்தி குறைந்துவிடும். இவர்களுக்கு ஒன்றரை சதவிகிதம் எலும்பு தேய்மானம் ஏற்படும். இது இயற்கை. ஆனால் ஒரு சிலருக்கு இரண்டரை சதவிகிதத்திற்கு மேல் எலும்பு தேய்மானம் ஏற்பட்டால், அவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும் விளிம்பில் இருப்பதாக தெரிந்துக் கொள்ளலாம். இவர்கள் உடனடியாக எலும்பின் தன்மையை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையை பெற வேண்டும். கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் எலும்பின் தன்மை சீக்கிரம் குறைந்து எளிதில் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையின் தீவிரத் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆண்களைப் பொறுத்தவரை 70 வயதிற்கு மேல் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. காரணம் 70 வயது வரைக்கும் இவர்களுக்கு ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்கும். அதற்கு பின் அது குறைந்துவிடும். இந்த ஹார்மோன் ஆண்களின் எலும்பு தேய்மானம் அதிகம் ஏற்படாமல் பாதுகாக்கும். ஆனால் பெண்களுக்கு 50 வயதிற்கு மேல் இருந்தே எலும்பு தேய்மானம் பிரச்னை ஏற்படும். இவர்களுக்கு மெனோபாஸ் காரணமாக ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரப்பது நின்றுவிடும். இதன் காரணமாக எலும்பு தேய்மானம் ஏற்பட ஆரம்பிக்கும். அதற்காக உடனடியாகவே அதன் தாக்கம் வெளிப்படையாக தென்படும்ன்னு என்று சொல்லிட முடியாது. ஐந்து வருடம் கழித்து தான் அதன் தாக்கம் தென்படும்.எலும்புத் தளர்ச்சிக்கு என்ன காரணம்?இது ஒரு சைலன்ட் நோய். இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் முதலில் தென்படாது. விட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து குறைவினாலும் இந்த நோயின் பாதிப்பு ஏற்படும். எலும்பு தேய்மானம் தீவிரமாகும் போது உடலில் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்படும். குறிப்பாக கை மணிக்கட்டு, தோள்பட்டை, கால் முட்டி போன்ற இடங்களில் சாதாரணமாக கீழே விழுந்தாலும் கூட எலும்பு முறிவு ஏற்படும். சிலருக்கு உட்கார்ந்து எழுந்தாலும் இடுப்பு அல்லது முதுகுத்தண்டில் முறிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. முதுகுத்தண்டில் எலும்பு தேய்மானம் ஏற்படும் காரணத்தால் அவர்களின் உயரம் குறைந்து தென்படுவது மட்டுமில்லாமல், கூன் விழவும் வாய்ப்புள்ளது. ஆண்களுக்கு கூன் விழுவது குறைவாக இருந்தாலும் அவர்களின் உயரத்தில் மாற்றம் தென்படும். மது மற்றும் புகை பிடிப்பதாலும், புற்றுநோயின் பாதிப்பால் கொடுக்கப்படும் கீமோதெரபி காரணமாக கூட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பெண்களுக்குதான் பாதிப்பு அதிகம்!ஆண்கள் வயதானாலும் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெண்கள் அப்படி இல்லை. வயோதிகம் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்துவிடுகிறார்கள். சூரிய ஒளியில் தான் அதிக அளவு விட்டமின் டி சத்துள்ளது. இது உடலில் ஊடுருவி சென்று எலும்பினை வலுவடைய செய்யும். பெண்கள் மாலை நேரத்தில் கோயிலுக்கு கூட தற்போது செல்வதில்லை. இதனால் அவர்களுக்கு இயற்கையாக கிடைக்கக் கூடிய விட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குழந்தை பிறப்பின் போது அதிக அளவு பால் கொடுப்பதால், அவர்கள் உடலில் அதிக அளவு கால்சியம் சத்து குறைவு ஏற்படும். அதை ஈடுக்கட்ட அவர்கள் இரு மடங்கு கால்சியம் சார்ந்த உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த உணவினை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம். இது தவறினாலும் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏற்படும். உடற்பயிற்சி உண்டா?எலும்பு திடமாக இருக்க உடற்பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் ஜிம்மிற்கு சென்று பெரிய எடைகளை எல்லாம் தூக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தசைகளை வலுவாக்க நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். நாம் எவ்வளவு எலும்புக்கு பயிற்சி அளிக்கிறோமோ அது தசையை இறுக்கி பிடித்து, எலும்பினை தடமாக இருக்க உதவும். இதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை அவர்களை சீக்கிரம் பாதிக்காது. மேலும் டாக்டர்களின் பரிந்துரை பேரில் கால்சியம் அல்லது விட்டமின் டி சப்ளிமென்ட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். 55 வயசாயிடுச்சுன்னு பெண்களில் பலர் தங்களின் சோஷியல் வேலைகளை குறைத்துக் கொள்கிறார்கள். நடக்கமாட்டாங்க. அதனால் உடல் எடை கூடும். இதுவே எலும்பின் தன்மையை பாதிக்கும். வீட்டில் மட்டுமே நடக்காமல் மாலை நேரத்தில் கோயில் அல்லது பார்க்கில் சென்று நடக்கலாம். இதன் மூலம் உடல் மட்டும் இல்லை மனமும் திடமாக இருக்கும். என்னென்ன சாப்பிட்டால் தப்பிக்கலாம்?தினசரி 1 முதல் 13 கிராம் வரை கால்சியம் சத்து தேவை. இதை பெற காலை மற்றும் மாலையில் பால் சாப்பிடலாம். மதியம் மோர் குடிக்கலாம். உணவில் வாரம் ஒரு முறை ராகி ேசர்த்துக் கொள்ளலாம். கீரை மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இரவில் வாழைப்பழம் சாப்பிட்டாலும் நல்லது. அைசவ உணவில் நண்டு மற்றும் மீன் உணவில் அதிகம் உள்ளது. இதனையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிலர் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு எலும்பு திடமாக இருக்கும் என்று சொல்லிட முடியாது. அதனால் யாராக இருந்தாலும் 50 வயதிற்கு மேல் உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டால் உடனடியாக எலும்பின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியம். வயதானவர்கள் முடிந்தவரை தங்களின் ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவது அவசியம். ;-தொகுப்பு: ப்ரியா
40+ வயசா? எலும்புத் தளர்ச்சி கவனம்!
previous post