ஓட்டப்பிடாரம், மே 19: எப்போதும்வென்றானில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை கனிமொழி எம்பி வழங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் எப்போதும்வென்றானில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு 40 மாற்றுத் திறனாளிகளுக்கு தலைக்கவசத்துடன் இருசக்கர வாகனத்திற்கான சாவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் ஜெகன்பெரியசாமி, மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, திமுக ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பிரமநாயகம், பிடிஓக்கள் சித்தார்த்தன், சசிகுமார், பஞ். முன்னாள் தலைவர் தலைவர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.