*மர்ம நபருக்கு வலை
ஆம்பூர் : ஆம்பூரில் விஷம் கலந்த பிரியாணி சாப்பிட்ட 4 நாய்கள், 2 பூனைகள் பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே பாலாற்றையொட்டி உள்ளது விவேகானந்தா நகர். இந்நிலையில், நேற்று காலை அங்குள்ள மெக்கானிக் கடை உள்ளிட்ட கடைக்காரர்கள் கடையை திறக்க வந்தனர்.
அப்போது ஆங்காங்கே நாய்கள், பூனைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் மற்றும் நகராட்சி சுகாதார பிரிவினருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். மொத்தம் 4 நாய்கள், 2 பூனைகள் இறந்து கிடந்தன. அதே பகுதியில் ஒரு பிரியாணி பார்சல் கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.
எனவே போலீசார் விஷம் கலந்த பிரியாணி வைத்து நாய்கள், பூனைகளை கொன்ற மர்ம நபர் யார்?, எதற்காக இந்த கொடூர செயலை செய்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.இதற்கிடையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் இறந்த நாய் மற்றும் பூனைகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். விஷம் கலந்த பிரியாணி சாப்பிட்ட நாய்கள், பூனைகள் இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.