கிருஷ்ணகிரி, ஜூலை 23: ஓசூர் வனக்கோட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 4.54 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் பசுமைப்போர்வை 23.27 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் நோக்கோடு, தமிழக முதல்வரால் “பசுமை தமிழ்நாடு இயக்கம்” திட்டம், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் துவக்கி வைக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், அப்பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிகோளாகும். இந்த இயக்கத்தின் கீழ், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உயர்ரக மரங்களான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி மரம் போன்ற மரங்களை வளர்க்க, விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி, வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள்ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்கவும் இந்த திட்டம் உதவும்.
இந்நிலையில், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தில், ஓசூர் வனக்கோட்டத்தில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 25 மரக்கன்றுகள் 2023-24ம் ஆண்டில் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாற்றங்கால் உற்பத்தி பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு நடவு பணிக்கு தயாராக உள்ளது. ஓசூர் வனச்சரகத்தில் நீர்மந்தி, புங்கன், நெல்லி, நாவல், மகாகனி, தேக்கு, சில்வர்ஓக் ஆகிய 66 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. இதேபோல் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், ஜம்புநாவல், தான்றி, நெல்லி, வேம்பு, மலைவேம்பு, மகாகனி, தேக்கு, சில்வர் ஓக், சீதா என 82,500 மரக்கன்றுகள், ஜவளகிரி வனசரகத்தில், சந்தனம், வேம்பு, செம்மரம், மலைவேம்பு, பலா, மகாகனி, ஜம்புநாவல், புளியன், தான்றி, பாதாம், ஈட்டி, தேக்கு என 1.10 லட்சம் மரக்கன்றுகள் நடவுக்கு தயாராக உள்ளது.
அதேபோல், அஞ்செட்டி வனசரகத்தில், வேம்பு, வேலன், நெல்லி, நாவல், அத்தி, அரசன் என 11 ஆயிரம் மரக்கன்றுகள், உரிகம் வனசரகத்தில், தேக்கு, மலைவேம்பு, மகாகனி, நெல்லி, புளியன், செம்மரம், விளான், இலுப்பை, சில்வர் ஓக் என 22 ஆயிரம் மரக்கன்றுகள், ராயக்கோட்டை வனசரகத்தில், ஜம்புநாவல், புங்கன், மகாகனி, மகிலம், செண்பகம், பாதாம், பூவரசன், தேக்கு, சில்வர் ஓக், நெல்லி, செம்மரம், மலைவேம்பு என 62,150 மரக்கன்றுகள், கிருஷ்ணகிரி வனசரகத்தில், நெல்லி, எலுமிச்சை, புங்கன், மகாகனி, தேக்கு, வேப்பன், கொய்யா, செம்மரம், விளான், இலுப்பை, புளியன், பலா, மகிழம், வேம்பு, சில்வர் ஓக், பாதாம் என 1 லட்சத்து 375 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது.
விவசாயிகள் மரக்கன்றுகளை ஊடுபயிராகவோ, தொகுப்பாகவோ, வளர்ப்பு நடவாகவோ நடவு செய்து பயன்பெறலாம். போதுமான தண்ணீர் மற்றும் பாதுகாப்பு வேலி உள்ளிட்ட அத்தியாவசியமான வசதிகள் உள்ள நிலங்களில், தங்களது மண் தன்மைக்கேற்ப தேவையான மரக்கன்றுகளை வனத்துறை மூலம் இலவசமாக நடவு செய்து தரப்படும். இம்மரக்கன்றுகளை பாதுகாத்து பசுமை போர்வை ஏற்படுத்த நில உரிமையாளர்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், நடவு செய்யப்பட்ட மரம் வளர்ப்பினால் கிடைக்கப்பெறும் வருவாயினை, முழுமையாக அனுபவிக்கக்கூடிய உரிமை நில உரிமையாளர்களுக்கு உள்ளது. அரசுக்கு பங்கு ஏதும் செலுத்த தேவையில்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, அதிக அளவில் பசுமை போர்வையினை ஏற்படுத்த வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.