நாமக்கல், மே 25: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவுநேர வெப்பநிலை குறைந்துள்ளது. வானம் மோக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு திசையில் இருந்து, மணிக்கு 20 முதல் 28 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
இன்று (25ம் தேதி) 2 மிமீ., மழையும், நாளை 26ம்தேதி 12மி.மீ., 27ம்தேதி 11மி.மீ., 28ம்தேதி 2 மிமீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இன்று (25ம் தேதி) முதல், வரும் 28ம் தேதி தேதி அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 31 முதல் 34 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி முதல் 25 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். அடிக்கடி மழை விட்டு விட்டு பெய்வதால், ஈக்கள் இனப்பெருக்கும் அதிகரிக்கும் சூழல் உள்ளது. கோழிப்பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்ய ஸ்பாட் கார்டு முறையை கடைபிடிக்கலாம். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.