செங்கல்பட்டு ஜூன் 4: மாமல்லபுரம் பகுதியில் 9 வயது சிறுவன் மற்றும் அவரது சகோதரி 7 வயது சிறுமி ஆகியோர் தனது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சத்யா (30). மேலும், பக்கத்து வீடு என்பதால் அண்ணன், தங்கையான 2 குழந்தைகளும் சத்யாவின் வீட்டிற்கு உரிமையோடு சென்று விளையாடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு அண்ணன், தங்கை இருவரையும் தனது வீட்டுக்கு விளையாட வருகிறீர்களா? என அழைத்து சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து சிறுவர்களிடம் காண்பித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் வீடியோவை உங்கள் பெற்றோரிடம் காண்பித்துவிடுவேன் எனவும் கூறியுள்ளார்.
வீடியோவை காண்பித்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த வீடியோவை பாதிக்கப்பட்ட சிறுவர்களின் சித்தப்பாவின் நண்பருக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் சிறுவர், சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.இதனால் ேகாபமடைந்த பெற்றோர், குழந்தைகளுக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து கடந்த 28.8.2020 அன்று மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நஷீமாபானு, சிறுவன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ளதால் சத்யா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன் என தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், சிறுவனுக்கும் இழப்பீடு தொகையாக தலா ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடதக்கது.