அம்பத்தூர்: குடோனில் பதுக்கிய தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட கடைகள், வணிக வளாகங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில், தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, பாடி காமராஜர் நகர், 3வது தெருவில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில், அங்கு அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட டீ கப், தண்ணீர் கப், பிளாஸ்டிக் தாள்கள் உட்பட பல்வேறு வகையான 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி, ரகசியமாக விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த அனைத்து பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.