புதுடெல்லி: டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் ஒன்றில் கடந்த வாரம் வெள்ளம் புகுந்ததில் 3 மாணவர்கள் மூழ்கி இறந்தனர். இந்த நிலையில், டெல்லி முகர்ஜி நகரில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் தீ மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க தவறியதாக தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதில்,3 மாணவர்கள் பலி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் பயிற்சி மையங்கள் என்பது, மரண அறைகளாக மாறிவிட்டன. பயிற்சி மையங்கள் பாதுகாப்பு விதிகளை சரியான முறையில் கடைபிடிக்கும் வரையில் அவை ஆன்லைனில் செயல்பட முடியுமா? என்பது கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு, டெல்லி அரசு மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.