சென்னை: 3ம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரூ.4058.20 கோடிக்கு விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 3வது வழித்தடமான 3வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு ரூ.4058.20 கோடியிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜிகா நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துக்கு கடந்த ஜூன் 20ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மூன்று ஒப்பந்தங்களும் கீழ்ப்பாக்கம் மெட்ரோவில் இருந்து தரமணி வரை 12 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான அனைத்து வகையான பணிகளும் மற்றும் 4 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ், பொது மேலாளர் ரவிச்சந்திரன், கூடுதல் பொது மேலாளர் குருநாத் ரெட்டி, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.