திருத்தணி: பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேய நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 16 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக செங்கல்வராயன் (59) என்பவர் வேலைபார்த்து வருகிறார். இவர், வரும் 2025ம் ஆண்டில் பணி ஓய்வுபெறவிருக்கிறார். இப்பள்ளியில் கடந்த 5ம் தேதி 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு கழிவறையில் தலைமையாசிரியர் செங்கல்வராயன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியர் செங்கல்வராயன் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். பள்ளி மாணவியும் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார்.
இப்புகாரை பள்ளிப்பட்டு போலீசார் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருத்தணி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மலர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தீவிர விசாரணை நடத்தினார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும் விசாரித்தார். விசாரணையில், தனக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று பள்ளி மாணவியும் அவரது பெற்றோரும் போலீசாரிட்ம எழுத்துமூலமாக தெரிவித்தனர். தற்போது 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், நேற்று பள்ளி தலைமையாசிரியர் குறித்து மாணவி பேசிய வீடியோ வைரலாகப் பரவியது. இதில், பள்ளி கழிவறையில் வைத்து, தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தனக்கு தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்று பள்ளி சிறுமி எழுத்துபூர்வமாக தெரிவித்த நிலையில், அப்பள்ளி தலைமையாசிரியர் செங்கல்வராயனிடம் பெருந்தொகை கேட்டு தொடர் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ஒருசிலர் அவரிடம் அதிகளவில் பணம் பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.