மெக்கே: ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா ஏ அணி 171 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் 2 ஒருநாள் போட்டியிலும் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற ஆஸி. ஏ அணி முதலில் பந்துவீச… இந்தியா ஏ அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன் குவித்தது. ராகவி பிஸ்ட் 53, தேஜல் ஹசப்னிஸ் 50, சஜீவன் சஜனா 40, கேப்டன் மின்னு மணி 34, கிரண் நவ்கிரே 25, உமா செட்ரி 16 ரன் எடுத்தனர். ஆஸி. ஏ பந்துவீச்சில் மெய்த்லன் பிரவுன் 3, ஹான்காக், சார்லி நாட் தலா 2, டெஸ் பிளின்டாப், கேத் பீட்டர்சன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து 50 ஓவரில் 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி, 22.1 ஓவரில் 72 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
மேடி டார்க் 22, டெஸ் பிளின்டாப் 20, சார்லி நாட் 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் பிரியா மிஷ்ரா 5 ஓவரில் 2 மெய்டன் உள்பட 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். மின்னு மணி 2, மேக்னா சிங், யாஷ்ஸ்ரீ, சைகா இஷாக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா ஏ அணி 171 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்த, ஆஸ்திரேலியா ஏ 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் மோதும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கோல்டு கோஸ்ட் நகரில் ஆக. 22ம் தேதி தொடங்குகிறது.