ஆவடி: ஆவடி, கவுரிபேட்டை, பழைய கள்ளுக்கடை தெருவை சேர்ந்த சிவலிங்கம் (46). அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக கள்ளுக்குடை தெரு வழியாக நடந்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரதாப், கோகுல், ஆரிப், ஜாவித் ஆகியோர் குடிபோதையில் சிவலிங்கத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கத்திமுனையில் மிரட்டி, அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறிக்க முயன்றனர். தடுத்ததால் ஆத்திரத்தில் சிவலிங்கத்தின் தலை, கைகளில் கத்தியால் சரமாரி வெட்டினர்.
மேலும் அங்கிருந்த பெட்டிக் கடையில் இருந்த சோடா பாட்டிலை எடுத்து வீசினர். படுகாயமடைந்த சிவலிங்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலை மற்றும் கைகளில் 5 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடினர். அதே பகுதியில் பதுங்கியிருந்த ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஆரிப் (26), கோகுல் (23), கவுரிபேட்டை சேர்ந்த ஜாவித் (27) ஆகிய 3 பேரை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான பிரதாபை வலைவீசி தேடி வருகின்றனர்.