மும்பை: ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, செப்டம்பர் மாதம் இந்தியா வந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் செப்.14, 17, 20 தேதிகளில் விளையாட உள்ளது. இந்த 3 ஆட்டங்களும் முதலில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த 3 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்கள் சண்டிகரிலும், கடைசி ஆட்டம் டெல்லியிலும் நடைபெறும் என்று நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு, ஆண்கள் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால், அதற்கு வசதியாக சென்னை அரங்கை, களத்தை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் புதுடெல்லி அருண் ஜெட்லி அரங்கிற்கு மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக நவம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட், கொல்கத்தாவில் நடைபெறும். பெங்களூரில் நடைபெற இருந்த தென் ஆப்ரிக்கா – இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் குஜராத்தின் ராஜ்கோட்டுக்கு மாற்றப்படுகிறது.