சென்னை: காவேரி மருத்துவமனை கடந்த 3 நாட்களில் வெற்றிகரமான 3 நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 2 அல்லது அதற்கும் குறைவான நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளே நடைபெறுகின்றன. இந்த நிலையில் வடபழனி காவேரி மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை குழுவினர் தொடர்ச்சியாக 3 நாட்கள் காலஅளவிற்குள் 3 நுரையீரல் மாற்று சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளனர். 72 வயதான முதல் நோயாளி, வீட்டில் ஆக்ஸிஜன் மற்றும் செயற்கை சுவாச ஆதரவோடு உயிர்வாழ்ந்து வந்தவருக்கு ஒற்றை நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கோவிட் தொற்றுக்குப் பிறகு 40 கிலோ உடல் எடையை இழந்த 2வது நோயாளிக்கு இரு நுரையீரல்களும் உறுப்பு மாற்று சிகிச்சையில் மாற்றிப் பொருத்தப்பட்டன. 3வது நோயாளிக்கு தானமளிப்பவர் மற்றும் தானம் பெறுபவருக்கான பொருத்த நிலை பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மெய்நிகர் முறையில் குறுக்கு பொருத்த சோதனை செய்யப்பட்டு இரு நுரையீரல்களும் ஒரே நேரத்தில் மாற்றிப் பொருத்தப்பட்டன. இந்நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதற்குப் பிறகு நீண்டகால கண்காணிப்பு மற்றும் கவனிப்பு சேவையை மருத்துவ குழு வழங்கும்.
இதுதொடர்பாக காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: வடபழனி காவேரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினரின் இந்த நேர்த்தியான சாதனை, மருத்துவ அறிவியலை மேலும் முன்னேற்றுவதிலும் மற்றும் மிக நவீன சிகிச்சை பராமரிப்பை நோயாளிகளுக்கு வழங்குவதிலும் இம் மருத்துவமனை கொண்டிருக்கும் பொறுப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. மிகக்குறுகிய காலஅளவிற்குள் 3 நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருப்பது, ஒட்டுமொத்த மருத்துவ குழுவின் அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் ஒத்துழைப்பு மிக்க கூட்டுமுயற்சியின் சக்தியை வலுவாக எடுத்துக் கூறுகிறது. உயிரைக் காப்பாற்றுகிற இத்தகைய சிகிச்சை செயல்முறைகளை வழங்குவதிலும் மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றியமைக்கிற உடலுறுப்பு தான செயல்முறைக்கு ஆதரவளிப்பதிலும் நாங்கள் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.