பூரி: பூரி ஜெகநாதர் கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஒடிசாவின் கடலோர மாவட்டமான பூரியில் 11 – 12ம் நூற்றாண்டை சேர்ந்த புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் பாலபத்திரர், அவரது சகோதரர் ஜெகநாதர், மற்றும் சகோதரி சுபத்ரா ஆகியோர் ஆண்டுதோறும் தனித்தனி தேர்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். பூரி ஜகநாதர் கோயிலில் நடைபெறும் இந்த ரத யாத்திரை மிகவும் புகழ் பெற்றது. வௌிமாநிலங்கள் மட்டுமின்றி வௌிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பூரி ெஜகநாதரை தரிசித்து செல்வர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(27ம் தேதி) தொடங்கிய பூரி ெஜகநாதர் கோயில் ரத யாத்திரை வரும் ஜூலை 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 27ம் தேதி நடந்த முதல்நாள் ரத யாத்திரையின்போது இரவு 8 மணிக்கு மூன்று பிரம்மாண்ட தேர்களில் ஒன்றான பாலபத்ரரின் தலத்வாஜா தேரை வடம் பிடித்து இழுக்க லட்சக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்து கொண்டு விரைந்தனர். அப்போது பாலகண்டி பகுதியில் தலத்வாஜா தேர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்ட நெரிசலில் நகர முடியாமல் சிக்கி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அங்கு வெப்பக்காற்று நிலவியதால் சிலருக்கு வாந்தி, மயக்கம் வந்து, கீழே விழுந்தனர். மேலும் சிலர் வௌியேற முயன்றனர். இந்த சம்பவங்களில் 625 பேர் காயமடைந்தனர். 2ம் நாளான நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல்நேற்று அதிகாலை வரை மூன்று தெய்வங்களின் திரைசீலைகளை அகற்றுவதை காண ஏராளமான பக்தர்கள் காத்து கொண்டிருந்தனர். 3ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கண்டிச்சா கோயில் அருகே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது ரத யாத்திரைக்காக பொருள்களை ஏற்றி வந்த இரண்டு சரக்கு லாரிகளுக்கு வழிவிட முயன்றபோது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதில், பசந்தி சாஹூ(36), பிரேமா காந்த் மொஹந்தி(80) மற்றும் பிரவதி தாஸ்(30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் பூரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.