பெரம்பூர்: சென்னை திரு.வி.க.நகர் வெற்றி நகர் திருவேங்கடம் தெருவை சேர்ந்தவர் பேபி (எ) சாந்தி. இவருக்கு சொந்தமான 2,598 சதுர அடி இடத்தை ரவிச்சந்திரன் மற்றும் அவரது சகோதரிகள், கடந்த 15 வருடங்களாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி தருமாறும் சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி தரும்படி, திருவிக நகர் போலீசாருக்கு அறிவுறுத்தியது.
அதன்பேரில், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் திருவிக நகர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார், நேற்று குறிப்பிட்ட இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீல் வைக்க சென்றனர். அப்போது, அந்த இடத்தில் இருந்த வீட்டை சோதனை செய்தபோது, 2 அடி நீளம் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் ஒன்றரை அடி நீளம் உள்ள 2 அம்மன் சிலைகள் இருந்தன. விசாரணையில், அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர் ரவிச்சந்திரன் என்பதும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவில் சென்னை மாநகர ஒருங்கிணைப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது.
மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இந்து அமைப்பை சேர்ந்த சிலர் இந்த சிலைகளை அவருக்கு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து திரு.வி.க நகர் போலீசார், 2 நாட்களுக்குள் சிலை சம்பந்தமான ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும் சிலைகளை போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்து நீதிமன்ற கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட சிலைகள் ஏதாவது கோயில்களில் இருந்து திருடப்பட்டதா அல்லது உண்மையிலேயே பணம் கொடுத்து வாங்கி நன்கொடை வழங்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.