சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாகவும், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பின் காரணமாகவும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதனால் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், 20ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.