சாத்தூர்: பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சாத்தூர் அருகே என்.சுப்பையாபுரம் விலக்கு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் மேலநீலிதநல்லூரை சேர்ந்த முருகன்(48), மகேஷ்(37), பவுன்ராஜ்(42) ஆகிய 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் மீது சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.