திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் விஜயகுமார், கொத்தனார். இவரது மகன் சஞ்சய் (10). அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரிமுத்துவின் மகள்கள் பிரியதர்ஷினி (10) சுபாஷினி (8). இவர்கள் 3 பேரும் கோனேரிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் முறையே 5, 6, 3ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் நல்லாத்தூரிலிருந்து ஓங்கூர் செல்லும் ஆற்றங்கரையில் உள்ள நாவல் மரத்தில் நாவற்பழம் பறிக்க சென்றுள்ளனர். சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஆற்றில் நீர் அதிகளவில் செல்லும் நிலையில், நாவற்பழம் பறிக்கும்போது எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் மூழ்கினர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்தபோது பள்ளி சீருடை மட்டும் நீரில் மேலே தெரிந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின்படி ஒலக்கூர் போலீசார் வந்து பார்த்தபோது 3 சிறுவர், சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.