திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள வீராங்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதியில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீராங்குப்பம் என்னும் சிற்றூரின் வடக்கு எல்லையில் கற்திட்டை அமைப்புடன் கூடிய சதிக்கல் ஒன்றைக் கண்டறிந்தனர். இது குறித்து ஆ.பிரபு கூறியதாவது: வீராங்குப்பம் என்னும் சிற்றூரில் கள ஆய்வினை மேற்கொண்டபோது, ஊரின் வடக்கு எல்லையில் சுமார் 3.5 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்ட மூன்று பலகைக் கற்களில் அமைக்கப்பட்ட சதிக்கற்கள் இருப்பது கண்டறியப்பட்டன. புதர் மண்டியிருந்த அப்பகுதியினைச் சுத்தம் செய்து சதிக்கற்களை தண்ணீர் கொண்டு கழுவித் தூய்மைப்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.
ஒவ்வொரு பலகைக் கல்லிலும் வீரன் ஒருவன் தன் வலது கையில் வாளும் இடது கையில் கட்டாரி என்ற குத்துக் கருவியினையும் ஏந்தியவாறு உள்ளார்கள். அவர்களது கழுத்திலும் கைகளிலும் அணிகலன்களை அணிந்துள்ளார்கள். இடையில் கச்சையும் அதனோடு சிறு கத்தியும் வைத்துள்ளார்கள். வீரர்கள் அருகில், அவர்கள் உயிர்நீத்தவுடன் அவர்களோடு தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்ட அவரவர் மனைவியரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவருக்கு இரண்டு மனைவியர் இருந்துள்ளதை கல்லில் செதுக்கி விவரித்துள்ளனர். கல்லில் செதுக்கப்பட்ட பெண்ணுருவங்களின் வலது கரங்களில் குடங்களை ஏந்திய நிலையில் உள்ளனர். இடது கரத்தின் ஆள்காட்டி விரலை மேல்நோக்கி உயர்த்தியவாறு காணப்படுகின்றனர். இது வீரர்கள் போர்க்களத்தில் போரிட்டு இறந்து சொர்க்கலோகம் சென்றனர் என்பதை அறிவிப்பதாகும்.
பொதுவாக நடுகற்களில் வீரர்களோடு பெண்ணுருவங்களும் இடம்பெறும்போது அவற்றை சதிக்கல் என அழைப்பது வழக்கமாகும். அவ்வகையில் இங்குள்ள மூன்று கற்களும் போரில் உயிரிழந்த வீரர்களையும், அவர்களோடு தங்கள் உயிரையும் மாய்த்துக் கொண்ட அவர்களது மனைவியர்களையும் நினைவுகூறும் விதமாக வடிக்கப்பட்டவையாகும். இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் கற்திட்டை எனும் கல் கட்டுமான அமைப்பை ஏற்படுத்துவது பெருங்கற்கால மக்களின் வழக்கமாகும். அதனை நினைவுகூரும் விதமாக இங்குள்ள மூன்று சதிக்கற்களும் ‘ப’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்புக்குரியதாகும். தொடர்ந்து அந்நடுகல் குறித்து அவ்வூர் மக்களிடம் கேட்டபோது, ‘குண்டத்தம்மன்’ என்ற பெயரில் ஒரு காலத்தில் வழிபட்டதாகவும் பின்னர் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இக்கல்லின் அமைப்பினைப் பார்க்கும்போது இவை போரில் மடிந்த வீரர்களுக்கும், அவ்வீரர்களோடு உயிர் நீத்த அவர்தம் மனைவியருக்குமான நினைவுக்கற்களாகும். செதுக்கப்பட்டுள்ள உருவ அமைப்பினைப் பார்க்கும்போது இக்கல் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சின்னமாகக் காட்சியளிக்கும் இக்கற்கள் கேட்பாரற்று புதர்மண்டிக் கிடப்பது வேதனைக்குரிய ஒன்றாகும். திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கிடைத்துவரும் இது போன்ற தடயங்கள் யாவும் இப்பகுதியின் வரலாற்றுப் பின்புலத்தினைப் பறைசாற்றுவதாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.