சென்னை: மது போதையில் தகராறு செய்ததை தட்டி கேட்டவரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிராட்வே செம்புதாஸ் தெருவை சேர்ந்தவர் தங்கமணி (22). அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி, தங்கமணி தனது நண்பர் முத்துவுடன் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, ஆர்மேனியன் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த 3 பேர், தங்கமணியை பீர் பாட்டிலால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த தங்கமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொடுங்கையூரை சேர்ந்த பாலாஜி (23), அண்ணாநகரை சேர்ந்த நாத் (22), கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஏலிய்யா (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், பாலாஜி அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்வதை தங்கமணி தட்டிக்கேட்டதால், அவரை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் பாலாஜி, நாத், ஏலிய்யா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.