மாலி: மாலியில் சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை செய்த 3 இந்தியர்கள், அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை மீட்க ஒன்றிய வெளியுற வுத்துறை நடவடிக்கையை தொடங்கி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா நாடாக மாலி உள்ளது. இங்கு ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மாலியில் உள்ள மேற்கு பிராந்தியமான கெய்ஸில் டைமண்ட் சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. இங்கும் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென்று ஆயுதங்களுடன் சிமெண்ட் தொழிற்சாலைக்குள் நுழைந்த பயங்கரவாதி கும்பல் திடீரென கண்மூடித்தனமாக தாக்குதலை நடத்தியது. பின்னர் அங்கிருந்தவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களில் 3 இந்தியர்களும் அடங்குவர்.
முதற்கட்ட விசாரணையில் இந்தியர்களை கடத்தியது அல்கொய்தா ஆதரவு பயங்கரவாதிகள் என தெரியவந்துள்ளது. அதாவது ஜமாத் நுஸ்ரத் அல் இஸ்லாம் வால் முஸ்லிம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிடம் மிகவும் துரிதமாக செயல்பட்டு வருவதோடு, பல தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மாலி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் இந்திய வெளியுறவு துறை, 3 இந்தியர்களையும் பத்திரமாக மீட்கும் பணியை தொடங்கி உள்ளது. இந்திய வெளியுறவு துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த சம்பவம் ஜூலை 1ம் தேதி நடந்தது. ஆயுதங்கள் ஏந்திய கும்பல், தொழிற்சாலைக்குள் நுழைந்து இந்தியர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றது.
இந்த செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு மாலி அரசுடன் தொடர்பு கொண்டு இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்துள்ளது. மாலி தலைநகர் பமாகோவில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டின் அதிகாரிகள் மற்றும் டைமண்ட் தொழிற்சாலையுடன் தொடர்பில் உள்ளன. மாலியில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் கேட்டு கொண்டுள்ளது. மேலும், பமாகோவில் உள்ள தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் வலியுறுத்தியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்கள் விரைவில் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.