புதுடெல்லி: மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க ரூ.55 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கிய 3 மருத்துவர்கள் கைதான நிலையில், 6 மாநிலத்திற்கு உட்பட்ட 40 இடங்களில் சிபிஐ ரெய்டு நடத்தியது. நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு, தேசிய மருத்துவ ஆணையம் சார்பாக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இந்நிலையில், சட்டீஸ்கரில் உள்ள ராவத்புரா சர்க்கார் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தங்கள் கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, ஆய்வுக்கு வரும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சாதகமான அறிக்கையைப் பெற முயற்சிப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
கல்லூரி நிர்வாகத்தினரும், ஆய்வை மேற்கொள்ளும் மருத்துவர்களும் கூட்டுசேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், பல்வேறு சட்டவிரோத வழிகளைக் கையாண்டு ஆய்வு நடைமுறைகளையே சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் சிபிஐக்கு புகார்கள் சென்றன. இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் இவ்விவகாரத்தை தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில், பெங்களூருவில் வைத்து லஞ்சப் பணம் கைமாற இருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த சிபிஐ அதிகாரிகள், லஞ்சப் பணமான ரூ.55 லட்சத்தைக் கைமாற்றும் போது, 3 மருத்துவர்கள் மற்றும் 3 இடைத்தரகர்கள் என மொத்தம் 6 பேரைக் கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
இந்த மெகா லஞ்சம் தொடர்பாக டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியது. கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவக் கல்வித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.