சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள 39 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். விழா காலங்கள் நெருங்கி வரும் நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் வேல்முருகன் ஆஜரானார். அப்போது, மின்வாரிய தரப்பு வழக்கறிஞர் அருண்குமாரிடம், மின் பகிர்மான கழகத்தில் காலி பணியிடங்களை எப்போது நிரப்புவீர்கள் என்பது குறித்து மதியம் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து 2 வாரங்களில் பதில் தரவேண்டும் என்று டான்ஜெட்கோவுக்கு உத்தரவிட்டனர்.