காஞ்சிபுரம்: தமிழ்நாடு நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18ம்தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுத்துறை சார்பில், ஜூலை 18ம்தேதியான நேற்று தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடும் வகையில், உறுப்பினர் சந்திப்பு முகாம் குன்றத்தூர் வட்டாரம், கொளப்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் முகலிவாக்கம் கிளையில் நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஜெய ஸ்ரீ தலைமை தாங்கினார்.
இம்முகாமில், மண்டல இணைப்பதிவாளரால் கூட்டுறவுத்துறையில் உறுப்பினராக இணைவதால் கிடைக்க கூடிய பயன்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் பல்வேறு வகையான சேவைகள், குறைந்த வட்டியில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் விவசாய உபகரணங்களான டிராக்டர், டிரோன், நெல் அறுவடை இயந்திரம் மற்றும் லாரி ஆகியவற்றை குறைந்த வாடகைக்கு வழங்குவது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கொளப்பாக்கம், கோவூர், அய்யப்பந்தாங்கல் மற்றும் தண்டலம் ஆகிய நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக, 6 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.33.20 லட்சமும், 9 நபர்களுக்கு ரூ.2.75 லட்சமும், 2 நபர்களுக்கு விதவை கடனாக ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ.36.95 லட்சம் கடன் வழங்கப்பட்டது. விழாவில், காஞ்சிபுரம் சரக துணை பதிவாளர், துறை அலுவலர்கள், சங்கம் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.