Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் குட்கா கடத்தல், கஞ்சா விற்பனை தொடர்பாக 348 பேர் கைது

*37 கிலோ கஞ்சா, 4 டன் குட்கா பறிமுதல்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், விற்பனை தொடர்பாக 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சா மற்றும் 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே பெருகி வரும் கஞ்சா மற்றும் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த, தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 31 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

இந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீசார் கஞ்சா ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பத்தி வருகின்றனர். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், போதைப்பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கஞ்சா பயன்பாடு இல்லாத கிராமமாக மாற்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்ட போலீசார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில், சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி எஸ்பி ஆபீஸ் வளாகத்தில் தொடங்கியது.

பெண் போலீசாரின் டூவீலர் பேரணி செந்தில்நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு மற்றும் எஸ்பி ஆபிஸ் வளாகத்தில் முடிந்தது. கல்லூரி மாணவ, மாணவிகளின் நடைபயண விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி, ஒட்டப்பட்டி வரைக்கும் நடந்தது.

பேரணியை மாவட்ட கலெக்டர் சதீஸ், மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதவி ஆணையர் (கலால்) நர்மதா, ஏடிஎஸ்பிக்கள் பாலசுப்பிரமணி, ஸ்ரீதரன், டிஎஸ்பிக்கள் சிவராமன், பாஸ்கர் மற்றும் போலீசார், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. முன்னதாக, போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு தர்மபுரி மாவட்டத்தில் 161 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 181பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 37.217 கிலோ கஞ்சா மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் சம்பந்தமாக, இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 167 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் வைத்திருந்த 4444.731 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1 டூவீலர் மற்றும் 16 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், கள்ளச்சாராயம் மற்றும் ஊறல் வழக்குகள் இதுவரை 9 பதிவு செய்யப்பட்டு, 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சாராயக் குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் சம்பந்தமான புகார்களை 10581 என்ற டோல்பிரீ எண் மூலமும், 9498110581 மற்றும் 6369028922 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும், டிரக் பிரீ டிஎன் என்ற மொபைல் அப் மூலமும், எந்த நேரத்திலும் புகார் அளிக்கலாம். புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.