புதுக்கோட்டை: புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 342 அரிய வகை பொருட்கள் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் கடந்த மே 20ம் தேதி தொல்லியல் துறை சார்பில் முதல்கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட்டது. 3.11 ஏக்கர் பரப்பளவில் இதுவரை 5 மீட்டர் நீள, அகலத்தில் 8 குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடங்கி சில நாட்களிலேயே ஒரு குழியில் 19 செ.மீ. ஆழத்திற்குள் ஒரு செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டது. மேலும், இதுவரை வட்டச் சில்லுகள் 49, கென்டி மூக்குகள் 2, கண்ணாடி வளையல்கள் 4, கண்ணாடி மணிகள் 95, சுடுமண் விளக்கு 1, தக்களிகள் 2, காசு 1, சூதுபவள மணி 1, மெருகேற்றும் கற்கள் 2 என 159 தொல்பொருட்களும், கீறல் குறியீடு இரண்டும் கிடைத்துள்ளன. ஆறு இதழ் கொண்ட தங்க மூக்குத்தி, எலும்பு முனை கருவி மற்றும் வட்ட வடிவ சிவப்பு நிறமுடைய கார்னீலியன் பாசி மணி ஒன்றும் கிடைத்துள்ளது.
பெரிய அளவிலான கட்டுமானங்கள் எதுவும் இதுவரை அறியப்படாத நிலையில், அகழாய்வின் முக்கிய திருப்பமாக ஒரு குழியில் சுமார் 8 அடி சுற்றளவில் வட்ட வடிவில் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டவடிவக் கட்டுமானத்தைச் சுற்றிலும், வடிகால் போன்ற செங்கல் கட்டுமானங்களும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இந்த சுவர் பற்றி அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என தொல்லியல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.இதுவரை இங்கு 342 அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9 முதுமக்கள் தாழிகள்
சிவகங்கை மாவட்டம், கீழடி அருகே உள்ள கொந்தகையில் ஏற்கனவே நடந்த 3 கட்ட அகழாய்வுகளில் 136 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், கொந்தகையில் கடந்த மே 18ம் தேதி 4ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. இந்த அகழாய்வில் கடந்த மாதம் இறுதி வரை 16 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய குழி தோண்டும் பணி நேற்று நடைபெற்றது. இதில், 9 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.