திருவண்ணாமலை, செப்.5: திருவண்ணாமலை மாவட்டத்தில், நடப்பு ஆண்டின் சொர்ணவாரி பருவத்திற்கான நேரடி கொள்முதல் நிலையங்கள் வரும் 11ம் தேதி முதல் 34 இடங்களில் தொடங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், நடப்பு ஆண்டின் சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 34 இடங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி முதல் விவசாயிகள் முன் பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, திருவண்ணாமலை தாலுகா பெரிய கிளாம்பாடி, கீழ்பென்னாத்தூர் தாலுகா அணுக்குமலை, சோமாசிபாடி, தண்டராம்பட்டு தாலுகா தண்டராம்பட்டு, செங்கம் தாலுகா அரட்டவாடி, பீமானந்தல், மேல்முடியனூர், காரப்பட்டு, கலசபாக்கம் தாலுகா எலத்தூர், ஆதமங்கலம், கடலாடி, போளூர் தாலுகா எடப்பிறை, குன்னத்தூர், ஆரணி தாலுகா அரியாப்பாடி, தச்சூர்.
வந்தவாசி தாலுகா மருதாடு, கொவளை, பெருங்களத்தூர், செய்யாறு தாலுகா பாராசூர், மேல்சீசமங்கலம், ஆலத்துறை, ஆலத்தூர், வெங்கோடு, தவசிமேடு, ஆக்கூர், எச்சூர், வெம்பாக்கம் தாலுகா வெம்பாக்கம், வடஇலுப்பை, நாட்டேரி, தென்னம்பட்டு, அரியூர், கீழ்நெல்லி, தூசி, வெங்களத்தூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. எனவே, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து அடங்கல், உதவி வேளாண்மை அலுவலரிடம் இருந்து மகசூல் சான்று பெற்று விவசாயிகள் முன் பதிவு செய்யலாம்.
அதோடு, ஆதார், சிட்டா மற்றும் வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். பதிவு செய்யப்படும் விபரங்கள், கள தணிக்கை செய்யப்பட்டு தகுதியின் அடிப்டையில் கொள்முதல் செய்ய ஏற்கப்படும். மேலும், கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும். முன் பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது பிரச்னைகள் ஏற்பட்டால் 9487262555 (தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.