சென்னை: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடு தான் பாஜ சட்டம் கொண்டு வந்துள்ளது என்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாஜ ஆட்சியில் அனைத்து மக்களது உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது. மக்களாட்சி இருக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணர்வு என்ற பெயரால் ஒற்றை கட்சி ஆட்சியை கொண்டு வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி முயன்று கொண்டிருக்கிறார். அது நடந்தால், ஒரே மனிதர் என்ற ஏதேச்சதிகாரத்துக்கு அது வழி வகுக்கும். எனவே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை முற்றிலும் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், பெண்களை ஏமாற்ற மகளிருக்கு நாடாளுமன்றத்தில், சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு வருவதை போன்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 33 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைத்து விடக்கூடாது என்ற சதி எண்ணத்தோடு தான், இந்த சட்டத்தையே பாஜக கொண்டு வந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். நடைபெற இருக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்த சட்டம் சொல்லியிருந்தால் பிரதமர் நரேந்திர மோடியை நாம் பாராட்டலாம். என்ன நடந்திருக்கிறது என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு அதை வைத்து தொகுதி மறுவறைக்குள்.. அந்த பிரச்னைகளை எல்லாம் முடிந்த பிறகு சொல்வார்களாம்.
2024ம் ஆண்டுக்கு பிறகு மோடி ஆட்சி இருக்கப் போவதில்லை என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். 1996ம் ஆண்டு திமுகவும், காங்கிரசும் ஆதரித்த ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில் இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் இந்த நிபந்தனைகளை எல்லாம் அன்று நாம் விதிக்கவில்லை. 2010ம் ஆண்டும் நமது கூட்டணி அரசு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்த போதும் இதுமாதிரியான நிபந்தனைகளை விதிக்கவில்லை. ஆனால் இப்போது பாஜக நிபந்தனை போடுகிறது என்றால், அவர்கள் உண்மையான அக்கறையோடு இதை கொண்டு வரவில்லை. மகளிர் எந்த உரிமைகளையும் பெற்று விடக்கூடாது, வீட்டில் முடங்கி கிடக்க வேண்டும் என்று நினைக்கிறது பாஜ ஆட்சி.
பிரதமர் ராஜீவ்காந்தி தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை முதன் முதலாக உறுதி செய்தார். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன் முதலாக 1996ம் ஆண்டு வழங்கியவர் கலைஞர். இப்போது அந்த உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு. பொறுப்புகளில் இருக்கிறார்கள். 50 சதவீதத்துக்கு மேல் இருக்கிறார்கள். ஏழை, எளிய விளிம்பு நிலையில் உள்ள மக்களுடைய நிலை அவர்களின் குரல் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். அப்படி ஒலிக்கக் கூடாது என்பதற்காக தான் பாஜ நினைக்கிறது.
இது பாஜகவின் அரசியல் தந்திரம் மட்டுமல்ல. அரசியல் சதியாக பார்க்க முடிகிறது. இந்தியா கூட்டணி என்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல, கொள்கை கூட்டணி. அதை மறந்து விடாதீர்கள். சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி கருத்தியல், அனைவருக்குமான அரசியல் பங்கீடு என்ற கோட்பாடுகளை கொண்டதாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைப்பதின் மூலமாக மகளிர் உரிமை மட்டுமல்ல அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய இந்தியாவாக நாம் உருவாக்க வேண்டும்.
சொத்தில் சம உரிமை, வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிக் கூடங்களில் கட்டாயமாக பெண்களைத் தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய பெண்ணுக்கு திருமணம் என்றால் அந்த பெண்ணுக்கு உதவி செய்யக் கூடிய ஒரு அற்புதமான திட்டம், இப்போது மகளிர் உரிமை தொகை, போன மாதம் 15ம்தேதி தொடங்கினோம். 14ம்தேதி இரவே பணம் சேர்ந்து விட்டது. இந்த மாதம் 15ம்தேதி வரப் போகிறது. 14ம்தேதி இரவே வந்து சேரப் போகிறது.
ஆக, மாதம் மாதம் ஆயிரம் ரூபாய். உதவித் தொகை அல்ல. பெண்களே உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைத் தொகை என்பதை மறந்து விடாதீர்கள். பேருந்துகளில் விடியல் பயணம், பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் இப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டுகிறோம் என்றால் இது தான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவும். இவ்வாறு அவர் பேசினார். இறுதியில் திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றியுரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். பேருந்துகளில் விடியல் பயணம், பெண் அர்ச்சகர்கள், ஓதுவார்கள் நியமனம் இப்படி தமிழ்நாட்டு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டுகிறோம் என்றால் இது தான் திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.