சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் காவலர்களை தாக்கிய வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 33 தொழிலாளர்களை, தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த 23ம்தேதி ஆயுத பூஜை கொண்டாடிய பிறகு, நள்ளிரவில் மது அருந்தியுள்ளனர். அப்போது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தகவலறிந்து 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், தகராறில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை சமாதானம் செய்து, கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர், வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காவலர் ரகுபதி (50) என்பவரின் மண்டை உடைந்து இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜ்குமார் என்ற காவலர் காயமடைந்தார். இருவரையும் சக போலீசார் மீட்டு அத்திபட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 2 போலீசாருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் மற்றும் செங்குன்றம் காவல்துறை ஆணையர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்படி பொதுசொத்தை சேதப்படுத்துதல், மிரட்டல், போலீசார் மீது தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். அதனடிப்படையில், அம்பத்தூர் காவல் உதவி ஆணையாளர் கிரி, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீசார், சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 25ம்தேதி காவலர்களை தாக்கியவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோஷன்குமார் (34), பிளாக் தாஸ் (32), பிண்டு (27), ராம்ஜித் (30), சுராஜ்குமார் (33) ஆகியோரை, போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் காவலர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்சிங், கணேஷ்சிங், மதன்குமார், சஞ்சய்குமார், சுரஜ்குமார், ராஜேஷ் பண்டிட், பிரேம்குமார், விகாஷ்குமார், ரவிக்குமார், சங்கர் கே பாத், சந்தன், உபேந்திரா, லட்மண்குமார் உள்ளிட்ட 28 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். காவலர்களை தாக்கிய வழக்கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைத்துள்ள நிலையில், மேலும் 28 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.