சென்னை: தமிழகத்தில் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு 32,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 104 மருத்துவ தகவல் மையம் தொடங்கி, நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியது. மனநல ஆலோசனைகள் வழங்குவது என்பதையும் கடந்து மாணவர்களுக்கு எதிர்கால கல்விக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ, எதை படித்தால் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தான விளக்கங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 1,35,715 பேர், இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 76,181 பேர், தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேர், முதல் கட்டமாக 80 மனநல ஆலோசகர்களை கொண்டு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 75 மருத்துவக்கல்லூரிகளிலும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு 11,850 பேருக்கு மட்டுமே, மீதம் உள்ளவர்களுக்கு பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர வாய்ப்புகள் இருக்கிறது. இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தமிழகத்தில் தொடங்கப்பட்டு 32,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவித்த உடன் தமிழகத்தில் கலந்தாய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினித், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.