*அடர்ந்த வன காடுகள் உருவாக்க திட்டம்
தர்மபுரி : தர்மபுரி நகராட்சி தடங்கம் குப்பை மேட்டில், 32ஆயிரம் டன் குப்பை கழிவுகள் நவீன இயந்திரம் மூலம் அரைத்து உரமாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. உரம் எடுத்து காலியான 5 ஏக்கரில், 2500 நாட்டு ரக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது.தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் இருந்து தினசரி 28 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. தொடக்கத்தில் நகராட்சி குப்பைகள், பென்னாகரம் சாலையில் உள்ள நகராட்சி குப்பைமேட்டில் கொட்டப்பட்டது. அங்கு குப்பை நிறைந்து வழிந்ததால், குப்பை கொட்ட இடம் இல்லை.
இதனால், தடங்கம் ஊராட்சியில் 11 ஏக்கர் காலி நிலத்தை முன்னாள் கலெக்டர் அமுதா தேர்வு செய்து, அங்கு நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைமேட்டில், கடந்த 20 ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது. ஏற்கனவே பென்னாகரம் சாலையில் இருந்த குப்பைமேடு கோயில் இடம் என்பதால், அங்கிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தடங்கம் நகராட்சி குப்பை மேட்டில் கொட்டப்பட்டது.
இதனிடையே, நகராட்சி குப்பை மேட்டில், குப்பைகள் நிரம்பி வழிந்ததால், காற்று மற்றும் வெயில் காலங்களில் அடிக்கடி தீப்பிடித்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகைமூட்டம் ஏற்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி நிர்வாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகராட்சி குப்பை மேட்டில் ₹3 கோடி மதிப்பீட்டில் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு, நவீன இயந்திரங்கள் அமைத்து, அதன் மூலம் கடந்த மே மாதம் முதல் உயிரிஅகழாய்வு (பையோ மைனிங்) என்ற முறையில், நுண்ணுயிர் உரமாக மாற்றப்படுகிறது. பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டிருந்த குப்பைகளை தரம் பிரித்து, இயற்கை உரமாகவும், பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி பயன்பாட்டிற்காகவும் பிரித்து அரைத்து அகற்றப்படுகிறது.
இதுகுறித்து தர்மபுரி நகராட்சி சுகாதார பிரிவு தனி அலுவலர் ராஜரத்தினம் கூறியதாவது: தர்மபுரி நகராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் 28 டன் குப்பைகள், தடங்கம் ஊராட்சியில் உள்ள குப்பை மேட்டில் கொட்டப்பட்டு வருகிறது. 5 ஏக்கரில் இருந்த குப்பைகளை, கடந்த 3 ஆண்டில் ₹3 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள 6 ஏக்கரில் 32 ஆயிரம் டன் குப்பை உள்ளது.
இந்த குப்பைகளை மறுசுழற்சி செய்ய, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பையோ மைனிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் மலைபோல் குவிந்து கிடக்கும் மக்கும் குப்பைகள் அரைக்கப்பட்டு, மாவுபோன்று பவுடராக மாற்றப்படுகிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்கள், மறுசுழற்சி செய்ய சேகரித்து தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பணிகள் இன்னும் 9 மாதங்கள் தொடர்ந்து நடக்கும். ஏற்கனவே 5 ஏக்கரில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டதால், காலியிடத்தில் 2500 நாட்டு ரக மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒருசில மரங்கள் கருகியுள்ளன. தொடர்ந்து சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் விட்டு இருக்கும் மரக்கன்றுகள் பாதுகாக்கப்படுகின்றன. தற்போது பருவமழை பெய்யத் தொடங்கி உள்ளது.
காலியிடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஏக்கரிலும் குப்பைகள் இல்லாத நிலை மாறும் போது, அந்த இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து காடுபோல் உருவாக்கப்படும். நவீன இயந்திரங்கள் கொண்டு குப்பைகள் அரைத்து பதப்படுத்தும் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்தவுடன் தடங்கம் குப்பை மேட்டு பகுதியில், அடர்ந்த வன காடுகள் உருவாக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.