ஈரோடு, பிப்.19: ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்களை தடுக்கும் வகையிலும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார், ராசாம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் போலீசாரை கண்ட ஒருவர் ஓட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், மாணிக்கம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த பிரியதர்ஷ்ன் (20) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 320 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.