சென்னை: நீலகிரியில் அதிகனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரையில் அவலாஞ்சியில் 300மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது. நேற்று காலையில் 10 மணிக்கு மேல் தமிழகத்தில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இன்று மழை குறைய வாய்ப்பு இருந்தாலும், மகாராஷ்ட்ரா அருகே நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி குஜராத் பகுதிக்கு சென்றுவிட்டது. மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையில் சூரத் பகுதியில் அதீத மழை பெய்கிறது. இந்த காற்று சுழற்சி பாகிஸ்தான் பகுதி நோக்கி நகர இருக்கிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் ஒடிசா பகுதியில் நீடித்து வந்த காற்று சுழற்சி பீகார் பகுதிக்கு நகரத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று தென் மேற்கு பருவமழை பெய்த நிலையில், படிப்படியாக மழை பெய்வது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்வது குறையும்.
இந்நிலையில், நேற்று மாலைக்கு பிறகு தமிழகத்தில் மழை பெய்வது தீவிரம் அடைந்தது. இன்று அது படிப்படியாக குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். டெல்டாவில் தூறல் மழை நீடித்துக் கொண்டு இருக்கும். அடுத்தடுத்து வங்கக் கடல் பகுதியில் காற்று சுழற்சிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மெல்ல நகரும் காற்றின் காரணமாக ஈரப்பதம் உள்ள காற்றை தமிழக கடலோரப் பகுதிக்கு அது கொண்டு வரும். கடலோரம் பயணித்துக் கொண்டு இருக்கும் காற்று தமிழகத்தை குளிர்விக்கும் நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில், இன்று தென்மேற்கு பருவமயைின் தீவிரம் குறைந்து வங்கக் கடலோரத்தில் லேசான மழை மட்டுமே பெய்யும். மேற்கில் இருந்து வரும் காற்று கிழக்கு நோக்கி சென்று விடும். இருப்பினும் 18ம் தேதி வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். மாலை இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். திருவள்ளூர் தொடங்கி சேலம் வரை மழை பெய்யும். தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். மேலும், 24ம் தேதியில் இருந்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். மாலை இரவில் வெப்ப சலன மழை பெய்யும். இது பரப்பில் மேலும் அதிகரித்து இடி மின்னல் மழை பெய்யும்.