பெய்ஜிங்: சென்னை பாக்ஸ்கான் ஆலையில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன இன்ஜினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை உடனடியாக நாடு திரும்ப சீன அரசு உத்தரவிட்டதால் அவர்கள் நாடு திருப்பி உள்ளனர். இதனால் ஐபோன் 17 உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து தயாரிக்கப்படும் ஐபோன்கள் மார்க்கெட் மூலம் விற்கப்படுகிறது. உலகில் விற்பனையாகும் ஐந்தில் ஒருபகுதி ஐபோன்கள் சென்னை அருகே உள்ள பாக்ஸ்கான் ஆலையில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக உலகம் முழுவதும் இருந்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் சென்னையில் தங்கி பணியாற்றி வருகிறார்கள் .குறிப்பாக சீனா, தைவான், வியட்நாம், தென்கொரியாவை சேர்ந்த ஏராளமான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் பணியாற்றி வருவதுடன் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ள ஆப்பிள் ஐபோன் 17 மாடல் உற்பத்தி தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் உள்ள ஆப்பிள் ஆலையை அமெரிக்காவில் தொடங்க ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கிடம் வலியுறுத்தி வந்தார்.
இல்லாவிட்டால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் ஆப்பிள் ஐபோன்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்து இருந்தார். இந்த சூழலில் சீன இன்ஜினியர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் தயாரிக்கப்படும் ஆப்பிள் ஐபோன் 17 உற்பத்தி தற்போது பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் பணியாற்றும் சீனாவை சேர்ந்த ஐபோன் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் 300க்கும் மேற்பட்டோரை உடனடியாக நாடு திரும்பும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களும் உடனடியாக சென்னையில் இருந்து சீனா சென்று விட்டதாக ப்ளூம்பெர்க் தெரிவித்து உள்ளது. இதனால் ஐபோன் 17 தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தைவான் ஊழியர்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சீனாவை சேர்ந்த வல்லுநர்கள் அனைவரும் திடீரென வெளியேறியது ஆப்பிள் நிறுவனத்தின் சென்னை தயாரிப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் சென்னை பாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் அசெம்பிளி வசதி, தயாரிப்பு தரம் ஆகியவை சீன வல்லுநர்கள் வசம் இருந்தது. அடுத்த தலைமுறைக்கான ஐபோன் 17 தயாரிப்பு பணியும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. தற்போது சீனா தனது வல்லுநர்களை அழைத்து விட்டதால் அந்த பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீன நிறுவனங்களின் உற்பத்தித் திறன்களை மற்ற நாடுகளுக்கு மாற்றுவதைத் தடுக்க சீனா சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* சென்னை பாக்ஸ்கான் ஆலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் உற்பத்தி தொடங்கியது.
* கடந்த ஆண்டு மட்டும் 2 கோடி ஐபோன்கள் சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.
* கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 1.5 கோடி ஐபோன்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
* மோடி என்னதான் செய்கிறார்?
சென்னை உற்பத்தி ஆலையில் இருந்து சீன பொறியாளர்கள் வெளியேறுவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை குறிவைத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான பதிவில்,‘மோடி ஜி, இந்தியாவின் உற்பத்தித் துறையிலிருந்து சீனா தனது அதிகாரிகளை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’ மற்றும்’ஆத்மநிர்பர் பாரத்’ திட்டங்களில் முற்றிலும் தோல்வியடைந்த மோடி அரசு, டோக்லாம் மற்றும் கல்வானை மறந்துவிட்டு, சீன நிறுவனங்களுக்கு ‘சிவப்பு கம்பளம்’ விரித்து, சீன குடிமக்கள் பிஎல்ஐ திட்டத்திலிருந்து பயனடைய விசா வழங்குவதை எளிதாக்கியது என்பது உண்மையல்லவா?.
ஆட்டோமொபைல்கள், மின்சார வாகனம், பாதுகாப்பு மற்றும் உயர் பாதுகாப்பு நாணய அச்சிடலுக்கு மிகவும் அவசியமான அரிய பூமி காந்தங்கள் மற்றும் கனிமங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருப்பினும் மோடி அரசாங்கம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், சீன அதிகாரிகள் இந்திய ஆட்டோமொபைல் துறையின் பிரதிநிதிகளுக்கு அதிகாரப்பூர்வ நியமனம் அல்லது ஒப்புதல் கூட வழங்கவில்லை என்பதும் உண்மையல்லவா?. கடந்த இரண்டு மாதங்களாக சீனா இந்தியாவிற்கு சிறப்பு உரங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ள நிலையில், மற்ற நாடுகளுக்கு தொடர்ந்து சீனா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியா 80 சதவீத சிறப்பு உரங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது.
பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற லாபகரமான பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க இவை முக்கியம். சீனா உரங்களை நிறுத்தியுள்ளதால்,ஏற்கனவே யூரியா மற்றும் டிஏபி உரங்களின் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நமது கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இந்த நடவடிக்கை தீங்கு விளைவிக்காதா? உங்கள் அரசாங்கத்தின் ‘சீன உத்தரவாதத்திற்கு’ காலாவதி தேதி இல்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கால்வானின் 20 துணிச்சலான வீரர்களின் தியாகத்திற்குப் பிறகு, நீங்கள் சீனாவிற்கு நற்சான்றிதழ் கொடுத்தீர்கள். இன்று சீனா அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறது. நாம் உதவியற்றவர்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் தெரிகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.