பொன்னேரி, அக். 2: மீஞ்சூர் பகுதியில் உள்ள வீட்டில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 30 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டது. ஆவடி காவல் சரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மாவா பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதை முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டுமென ஆவடி காவல் துறை ஆணையர் சங்கர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆலோசனை படி, உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மேற்பார்வையில், மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில், தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் விஜயலட்சுமி நகரில் வசித்து வருபவர் பாபு(50). இவரது வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட மாவா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. மேலும், 2 மிக்ஸி, சீவல் பாக்கு 20 கிலோ, ஜருதா 20 கிலோ, மாவா 30 கிலோ, சுண்ணாம்பு 5 கிலோ, பிளாஸ்டிக் கவர் 5 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், மாவா பாக்கெட்டுகள் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்ய பயன்படுத்தபட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் மீது அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை தயாரித்தவர் என வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.