திருவாரூர், ஆக. 24:திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடியாக நேரடி நெல் விதைப்பு பணியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டில் குறுவை பருவத்தில் 92 ஆயிரத்து 300 ஏக்கரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 500 ஏக்கரிலும், கோடை சாகுபடியாக 24 ஆயிரத்து 375 ஏக்கரிலும் என மொத்தம் 5 லட்சத்து 1 ஆயிரத்து 175 ஏக்கரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதில் கோடை பருவத்தில் 21 ஆயிரத்து 355 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் 60 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா சாகுபடியானது தற்போது துவங்கியுள்ள நிலையில் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் நன்னிலம் ஒன்றியங்களில் இதுவரையில் நீண்ட கால ரகங்களான சி-ஆர்.1009 மற்றும் ஏ.டி.டி 51 ஆகிய நெல் ரகங்களை விவசாயிகள் நேரடி தெளிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் இதுவரையில் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி பணி நடைபெற்றுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.