*காட்பாடி செக்போஸ்ட்டில் 2 பேர் சிக்கினர்
*மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் அதிரடி
வேலூர் : வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் மத்திய குற்றப்புலனாய்வு போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில், திருச்சிக்கு கடத்திய 100 கிலோ கஞ்சா காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்டில் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ‘ஆபரேஷன் கஞ்சா’ திட்டம் தொடங்கப்பட்டு மாநில எல்லைகளில் உள்ளூர் போலீசார், மதுவிலக்கு போலீசார், போதைப்பொருள் தடுப்பு போலீசார் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக வரும் பஸ்கள், லாரிகள், காய்கறி வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்கின்றனர்.
இந்நிலையில் தமிழக-ஆந்திர எல்லை வழியாக வாகனங்களில் கஞ்சா கடத்துவதாக சென்னையில் உள்ள மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி கந்தசாமி, இன்ஸ்பெக்டர் அன்பரசி தலைமையில் போலீசார் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 3 மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் நேற்று காலை தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை செக்போஸ்ட் வழியாக லாரியை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் பண்டல்களாக 100 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் ஈரோடு புதூர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளர் சதாசிவம்(32), திருச்சி ஆண்டாள் வீதியை சேர்ந்த டிரைவர் பாண்டீஸ்வரன்(25) என்பதும், விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிக்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து லாரியுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், பிடிபட்ட 2 பேரையும் வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்கள் யாரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தனர்? யாருக்கு சப்ளை செய்கின்றனர்? இவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் கஞ்சா கடத்தலில் மேலும் சிலர் கைதாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காட்பாடியில் நேற்று லாரியுடன் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.