Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காட்டுமன்னார்கோவில் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

*போலீசார் அதிரடி

காட்டுமன்னார்கோவில் : கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணந்தபுரம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் கலியமூர்த்தி மனைவி கலைச்செல்வி (65). திருமணமாகி கணவர் இறந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்து வரும் இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடியில் உள்ள மகள் வசந்தி(40) வீட்டிற்கு சென்றுள்ளார்.

மீண்டும் நேற்று கலைச்செல்வி, மகள் வசந்தி அவரது மகன் ராகுல் (24) ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்களை யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் முன் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்றது பிரபல கொள்ளையர்களான காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பல்வாய் கண்டன் கிராமத்தை சேர்ந்த மணவாளன் (25), அவரது கூட்டாளிகளான சப்பாணி குட்டையை சேர்ந்த மணிகண்டன்(25), பெரிய புங்கனேரியை சேர்ந்த அருண்குமார் (24) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் மணவாளன் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான சிறப்பு பிரிவு போலீசார் மூன்று பேரையும் சுற்றிவளைத்து கைது செய்து விசாரித்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு பைக்குகள், வெள்ளி, பித்தளை பொருட்கள், லேப்டாப், தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கலைச்செல்வியின் பேரன் ராகுல் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பிரபல கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.