பூந்தமல்லி: பொது விநியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பூந்தமல்லி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து, சென்னை வடக்கு அலகு இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் பூந்தமல்லியை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வேன்களை சோதனை செய்தனர்.
அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு வேன்களை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசியை கடத்தி வந்த திருநின்றவூரை சேர்ந்த சக்ரவர்த்தி(50), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன்(43), ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பூந்தமல்லி பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக அளவில் ஆந்திராவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3.5 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.