கரூர், நவ. 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் 3வது நாளாக நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டமாக நவம்பர் 26ம்தேதி முதல் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்யவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் பணியாற்றும் 250க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 3வது நாளாக நேற்று பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.