புதுடெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களில் திரிபுராவில் தனிப் பெரும்பான்மையுடனும், நாகலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்க உள்ளது. இதில், மேகாலயாவில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு பாஜ ஆதரவுடன் ஆட்சி அமைக்க தனிபெரும் கட்சியான என்பிபி முயற்சி செய்து வருகிறது.வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த மாதம் தேர்தல் நடந்தது. இந்த மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. திரிபுரா: திரிபுராவில் தற்போது முதல்வர் மாணிக் சகா தலைமையிலான பாஜ. ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில், பாஜ 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், அங்கு ஆட்சி அமைக்க பாஜ.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனால் திரிபுராவில் பாஜ. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 2018 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும் போது, இந்த முறை பாஜ 3 இடங்களை பறிகொடுத்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜ 35 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.முதல்வர் மாணிக் சகா போர்தோவாலி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஸ் குமார் சகாவை விட 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சிபிஎம் 11 தொகுதி, காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. புதிதாக உருவான திப்ரா மோதா கட்சி 13 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கட்சியின் தனி மாநில கோரிக்கையை தவிர்த்து, மற்ற கோரிக்கைகளை ஏற்று கொள்வதாக பாஜ தெரிவித்துள்ளது.இது தவிர, திரிபுரா மக்கள் முன்னணி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.நாகலாந்து: நாகலாந்தில் முதல்வர் நெபியூ ரியோ தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)- பாஜ கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு ஜூன்ஹெபெட்டோ மாவட்டத்தின் அகுலுடோ தொகுதியில் பாஜ.வை சேர்ந்த கசேட்டோ கினிமி போட்டியின்றி எம்எல்ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59க்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜ உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட என்டிபிபி 25 தொகுதிகளிலும், பாஜ 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் இங்கு மீண்டும் பாஜ கூட்டணி ஆட்சி அமைகிறது. இதன் மூலம், நெபியூ ரியோ 5வது முறையாக முதல்வராகிறார்.கடந்த சட்டசபைத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பாஜ இம்முறையும் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது பாஜ.வின் சமநிலையை காட்டுகிறது.இங்கு நாகலாந்து மக்கள் முன்னணி 2 தொகுதிகளிலும் இதரக் கட்சிகள் 21 இடங்களிலும் வெற்றி பெற்றன. முன்பு, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தையும் தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ் நாகலாந்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.வடக்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நெபியூ ரியோ 17,045 வாக்குகள், அலோங்டாகி தொகுதியில் போட்டியிட்ட பாஜ மாநில தலைவர் டெம்ஜென் இம்னா அலோங் 9,274 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.மேகாலயா: மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஆட்சி நடக்கிறது. ஷில்லாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருந்த ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) வேட்பாளர் லிங்டோ மாரடைப்பினால் காலமானதால், 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.இங்கு கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த பாஜ, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.இந்நிலையில், இங்கு நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், என்பிபி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 5 இடங்களிலும், பாஜ 2, யுடிபி 11 இடங்களிலும், பிற கட்சிகள் 10 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன.மேகாலயாவை பொருத்தவரை எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை உள்ளது. அங்கு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவே அதிக வாய்ப்பு உள்ளது. அங்கு பாஜ மற்றும் வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க தனிபெரும் கட்சியான என்பிபி முயற்சி செய்து வருகிறது.* அமித் ஷாவிடம் ஆதரவு கேட்டார் சங்மா இதனிடையே, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தனது டிவிட்டரில், “மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தொடர்பு கொண்டு அங்கு ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மேகாலயாவில் அடுத்து என்பிபி தலைமையிலான ஆட்சி அமைய ஆதரவு அளிக்கும்படி மாநில பாஜ தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்று கூறியுள்ளார்….